திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான திருவாவடுதுறை ஸ்ரீ ஒப்பிலாமுலையம்மை உடனாய ஸ்ரீ மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில் தை ரத சப்தமிப் பெருவிழா – 2023
23.01.2023 – திருஞானசம்பந்தர்உற்சவம்
காலை திருஞானசம்பந்தப் பெருமான் பஞ்ச மூர்த்திகளுடன் பல்லக்கில் திருவுலாக் கொண்டருளியபின் இறைவன் சந்நிதியில் திருப்பதிகம் ஓதுதல். திருஞானசம்பந்தப்பெருமான் பொன் உலவாக்கிழிபெறும் அற்புதக் காட்சி
பொன் உலவாக் கிழி ஐதீகவிழா
“காயிரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல வூரர்க்கம்பொன்
ஆயிரங் கொடுப்பர் போலும் ஆவடு துறையனாரே”
என்று, திருஞான சம்பந்தருக்கு துறைசைத் தலத்து இறைவன் செம்பொன் அருளிய அருள் திறத்தை, அப்பர் சுவாமிகள் தம்முடையப் பதிகத்தில் போற்றுகின்றார்.
பொன்உலவாக்கிழிபதிகம்
ஒருசமயம் திருஞான சம்பந்தரின் தந்தையாரான சிவபாத இருதயர் தாம் செய்யும் வேள்விக்குத் தேவையான பொருள் வளம் இல்லாமையால் மனவருத்தமுற்றார்.
தந்தையின் வாட்டத்தைப் போக்க எண்ணிய சம்பந்தர் பெருமான், தாம் துறைசைத் தலத்தில் எழுந்தருளிய சமயம், இத்தலத்து இறைவனார் மாசிலாமணீசரிடம் வேண்டி செந்தமிழில் திருப்பதிகம் ஒன்றைப் பாடி சமர்ப்பித்தார்.
இடரினும் தளரினும் எனத் தொடங்கும் இப்பதிகத்தினைப் பாடியவுடன், மனமகிழ்ந்த இறைவன் , அவரின் வேண்டுதலை ஏற்று, ஆயிரம் பொற்காசுகள் நிறைந்த உலவாப் பொற்கிழி ஒன்றை சிவ பூதம் வாயிலாக பலிபீடத்தின் மேல் வைக்கச் செய்து அருளினார்.
நச்சி இன்தமிழ் பாடிய ஞானசம் பந்தர்
இச்சையே புரிந்து அருளிய இறைவர் இன்னருளால்
அச்சிறப்பு அருள் பூதமுன் விரைந்து அகல் பீடத்து
உச்சி வைத்தது பசும்பொன் ஆயிரக்கிழி ஒன்று.
என்ற பெரியபுராணப் பாடல் இந் நிகழ்வினை அழகாக உரைக்கின்றது.
இந்த அற்புதச் செயலைப் போற்றும் விதமாக, துறைசை ஆலய தை ரதசப்தமி பெருவிழாவில் மகோத்சவத்தில், ஐந்தாம் திருநாள் ஐதீக விழா அமைகிறது.
ஐதீகவிழா
திருவிழாவின் ஐந்தாம் திருத் தினமன்று, திருஞானசம்பந்தர் (உற்சவர் திருமேனி) அலங்கரிக்கப் பட்ட பல்லக்கில், திருவீதி உலா எழுந்தருளுவார்.
விழாக் காலங்களில், இருவேளை திருவீதி உலாவின் போதும் , ஓதுவார்கள் திருமுறைப் பண்களைப் பாடியபடி உற்சவ மூர்த்திகளுடன் உடன் வருதல், சிறப்பான முறையில் இன்றும் கடைபிடிக்கப் பட்டு வருவது குறிப்பிட வேண்டிய அம்சமாகும்.
திருமடத்திலிருந்து ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானம் அவர்கள் ஏனைய தம்பிரான் சுவாமிகள் மற்றும் திருமடத்து அடியார்கள் புடைசூழ, ஓதுவார் மூர்த்திகள் பதிகம் பாட, கயிலாய வாத்தியங்கள் இசைக்க, மேள தாளங்கள் முழங்க, திருவீதி உலா முடிந்து ஆலயத்திற்குள் பிரவேசிக்கும் திருஞானசம்பந்தரை எதிர்கொண்டு வரவேற்பார்கள்.
அச்சமயம், திருமடத்து ஓதுவா மூர்த்திகள்
பொன் உலவாக் கிழி பதிகத்தைப் பாடுவர்.
பாடல் பாடி முடிவுற்றதும், உள்ளிருந்து புறப்பட்டு வரும் பூதம் அதனிரு கரங்களில் ஏந்தி வரும் பொற்கிழி முடிப்பினை , மகா நந்தியின் பின்னுள்ள பெரிய பலிபீடத்தில் வைத்தல் நிகழும்.. பின்னர் அம்முடிப்பை பல்லக்கில் காத்திருக்கும் சம்பந்தப் பெருமானிடத்து சிவாச்சாரியார் மூலம் சமர்ப்பித்து மகா தீபாராதனை செய்து வணங்குவர்.
இந்த நிகழ்வின் இறுதியில், திருமுறை இசை அறிஞர்களுக்கு பொற்கிழியும், விருதும் ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானம் அவர்களின் திருக்கரங்களால் வழங்கப் பெறும். விருது பெறும் இசை அறிஞர் பொன்னாடை போர்த்தப் பெற்று கௌரவிக்கப் படுவார்.
இந்த ஐதீக நிகழ்வானது இன்றும் அதனுடைய மரபு மாறாமல் , திருமடத்தினால் நிகழ்த்தப் பெறுவது சிறப்பான ஒன்றாகும்.
அப்படி சிறப்பு வாய்ந்த இந்த நிகழ்வு இந்த வருடம் ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானம் அவர்களின் அருளாணையின் வண்ணம் 23.01.2023 திங்கட்கிழமை அன்று நடைபெற உள்ளது.
பொருளாதார இடர்பாடுகள் நீங்கி செல்வம் பெறுக…
அனைவரும் வருக…
திருவருள் பெறுக…
‘பாவினுக் காயிரம் செம்பொன் பரிசருள்
மாசிலா மணியே போற்றி…!!!’