முத்துகுமார் இயக்கத்தில் அயலி என்ற Webseries zee5 ott தளத்தில் வெளியாகியுள்ளது
கதையின் சுருக்கம் :
ஒரு கிராம தேவதை அயலி, வேற்று சமூகம் சேர்ந்த ஒரு ஆணோடு அந்த ஊர் பெண் ஓடிவிடுவதால் அயலி அந்த ஊரின் மீது கோபம் கொள்கிறாள்.. அதனால் மக்கள் அந்த இடத்தை விட்டு நகர்ந்து இன்னொரு ஊருக்கு செல்கின்றனர் அங்கு சென்றவர்கள், நம் ஊர் பெண்ணின் நடத்தையால் தான் இப்படி நடந்தது எனவே அயலியின் கோபத்தை தணிக்க சில புது திட்டங்களை கொண்டுவந்து அதை பல ஆண்டுகள் கடந்தும் கடைபிடிக்கின்றனர்.. இந்த கதை 90களில் நடப்பதை போல வடிவமைத்திருக்கின்றனர்.. அதே ஊரில் பிறந்த ஒரு பெண், மருத்துவர் ஆக வேண்டும் என்று கனவு காண்கிறாள்.. அவளின் கனவை நிறைவேற்ற அந்த ஊரின் கட்டுப்பாடுகள் எப்படி தடையாய் இருக்கிறது அதை எப்படி அவள் உடைத்தால் என்பது மீதி கதை.
கதை கோவிலில் தொடங்குகிறது, பெண்களை கட்டுப்படுத்த அடைக்கி வைக்க சரியான ஆரம்பப்புள்ளி சாமி, கலாச்சாரம், மூடநம்பிக்கை என்பதை நெற்றி பொட்டில் அடித்தாற்போல் தொடக்கத்திலே உடைக்கிறார்.. இந்த தொடர் ஆரம்பம் முதல் முடிவு வரை எங்கும் சுற்றி சுற்றி கதையை பேசாமல் சொல்ல வந்ததை நேரடியாக காட்சியில் வைத்து முடிப்பது தனி சிறப்பு..
ஒரு பெண் பூப்பெய்தியவுடன் அவள் அடையும் மாற்றம் என்பதையும் அவள் அடையும் மகிழ்ச்சியையும்.. அவளை சுற்றி உள்ளவர்கள் அதை கொண்டாடுவதையும் பார்க்கும் இன்னொரு பெண் அதன் அழகியலை ரசிப்பது இதுவரை காட்டப்படாத பேசபடாத அழகியல்
அதே பெண் சடங்கு முடிந்து சில நாட்களில் வேறு ஒரு மாற்றத்திற்கு திணிக்கப்படுதலும், குழந்தை தன்மையை தொலைத்து பெரியமனுஷி ஆக்கப்படுதலும், இதுவரை பிறருக்கு விளக்கப்படாத வலிகள்
ஒரு பெண் இன்னொரு பெண்ணின் அனுபவத்தில் இருந்து தான் வயதுக்கு வந்துவிட கூடாது என்கிற பயம் கொள்ளுவதில் இருந்து, அது நடந்ததும் அடைகிற வலி, பய உணர்வு அபியின் நடிப்பின் உச்சம்.
இந்த படம் பேசும் உணர்வுகள் மிக முக்கியமானவை
பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்று ஒரு பெண் குழந்தையின் அம்மாவை கொண்டு ஒரு பக்கம் நமக்கு உணர்த்துகிறார் இயக்குனர்.. இன்னொரு பக்கம் ஒரு அம்மாவின் துணை இருந்தால் போதும் ஒரு பெண்ணே என்ன வேணுமானாலும் செய்யும் வலிமையை அடைகிறாள் என்பதை இன்னொரு தாயின் மூலம் புரியவைக்கிறார்..
கோவில் இருக்க வேண்டும் அதைக்கொண்டு தான் பெண்களை அடக்க முடியும் என்கிற ஆணதிக்க சிந்தனையில் தொடங்கிய படம், அந்த கோவிலுக்குள் புகுந்து கொள்ளும் பெண்களை அங்கிருந்து மீண்டும் வெளியேற்ற அவர்கள் படிப்பை தடுக்க வேண்டும் என்று பள்ளியை உடைப்பதில் முடிகிறது.. இந்த மொத்த படத்தின் கருவே அதுதான்.. கடவுள் பெயரால் பூட்டிவைக்க படும் பெண்களின் விடுதலை என்பது பள்ளிக்கூடத்தில் தான்..
நான் பள்ளி படிக்கும் போது அரசு பள்ளி சுவர்களில் பார்த்தது, கிட்டத்தட்ட அனைத்து அரசு பள்ளி சுவர்களிலும் நீங்கள் இந்த வாசகத்தை பார்த்திருக்கலாம்..
“ஒரு ஆணின் கல்வி அவன் குடும்பத்தை மாற்றும்
ஒரு பெண்ணின் கல்வி சமூகத்தை மாற்றும்”
ஏன் அப்படி என்றால், அடுத்த தலைமுறைக்கு தான் பெற்றதை கடத்த முனைபவள் பெண் தான், ஒரு ஆண் தன் வலிகளை அடுத்த தலைமுறைக்கு கடத்தாமல் தடுக்க முனைவான், ஆனால் ஒரு பெண் தான் தன் வாழ்வியலை அப்படியே அடுத்த தலைமுறைக்கு கடத்துவாள்.. இந்த தலைமுறையில் அவள் படித்துவிட்டால், அடுத்து எந்த தலைமுறையிலும் அந்த குடும்பம் படிப்பை அறியாத சமூகமாக மாறிவிடாது.. அதுவே இந்த தலைமுறையில் ஒரு மூடநம்பிக்கையை நீங்கள் பெண்ணின் மீது விதித்துவிட்டால், அடுத்து வரும் தலைமுறைகளில் அதை தடுப்பது என்பது அவ்வளவு எளிதாக இருக்காது..
தனக்கு பிடிக்கிறதோ இல்லையோ ஒரு பெண் அதை தனது கடமையாக்கி பின் தொடர்வாள், அடுத்த தலைமுறையையும் செய்யும்படி பணித்துவிடுவாள், அதனால் தான் அரசு சொன்னது பெண்ணின் கல்வி அடுத்த தலைமுறைக்கானது, அதைத்தான் இந்த படமும் பேசுகிறது.. பல இடத்தில் அபி சொல்லுவாள் நான் படித்ததால் தான் அடுத்து என்னைபார்த்து இன்னும் பலர் வருவர் என்று அதுதான் சரியான புரிதல்… பெண்களை புரிந்து கொண்டு அவர்களை கொண்டாட எழுதிய அதி அற்புதமான திரைப்படம் அயலி..
ஒரு காட்சியில் சிகப்பு மை தன்மேல் கொட்டியதும் தன் மாதவிடாய் மறைக்கப்பட்டத்தை அவள் உணரும் போது அவள் ஒரு கம்பீர நடை கொண்டு வீட்டுக்கு செல்வாள் அங்கு அபி தமிழாய் மிலிர்கிறாள்.. மாதவிடாய் ஒரு பெரிய விஷயமல்ல அதை கடக்கும் போது பெண்ணுக்கு உலகம் புரிகிறது என்பதாய் எனக்கு இந்த காட்சி புரிந்தது.
அந்த பொண்ணு ஓடிப்போச்சு அயலி நம்மள தண்டிச்சா, அப்போ, கூட ஓடிப்போன அண்ணனுக்கு குலசாமி இல்லையா, அவர அவங்க சாமி தாண்டிக்காத என்ற வசனங்கள், ஆணின் அதிகார திமிருக்கும், கடவுள் பெயரால் எழுதப்படுகிற மூட நம்பிக்கைக்கும் கேள்வியாய் நிற்கிறது..
ஒரு ஆண் இந்த சமூகத்தால் வளர்க்கப்பட்டவன், சில ஆதிக்கவர்கத்தின் கைபாவை ஆனவன், அவன் குடும்பத்தை நேசிக்கிறான் ஆனால் சமூகத்திற்கு அடங்கி இருக்கிறான், ஒரு நாள் அவன் உணர்கிறான் என் குடும்பம் தான் இந்த சமூகம், அவர்களை அடக்கி இந்த சமூகத்தை வாழவைத்து எந்தப்பயனும் இல்லை என்று… அப்போது அவன் குடும்பத்திற்காய் நிற்கிறான், அவர்களை கொண்டாடுகிறான்.. அவன் தான் தமிழின் தந்தையாக ஆண் சமூகத்தின் இன்றைய நம்பிக்கையாய் காட்சி அளிக்கிறான்..
ஊருகூடி தேர் இழுக்க வேண்டும் என்று சொல்லி பெண்களை தொடக்கூடாது என்று ஒதுக்கி வைக்கும் சமூகம் மறந்து விடுகிறது, தேரில் இருப்பது பெண் தெய்வம் என்று… அதை இன்னொரு முறை நினைவுபடுத்துகிறாள் அயலி..
வசனமும் காட்சியுமாக இந்த நாளில் கொண்டாடபடவேண்டிய முக்கியமான படம் அயலி…
ஆணாய் நானும் அயலியை கும்பிடப்போவதில்லை கொண்டாடபோகிறேன்
கட்டுரை -நான் விஜய்
2 Comments