Namma Thanjavur | Latest Tamil News, Cinema, Politics, India, World, Sports Live, Business News,   Daily Newspaper Online, Tamil Nadu, India

தஞ்சை டூ கென்யா அசத்தும் தஞ்சாவூர் தமிழன் நிமல்ராகவன்

தஞ்சை டூ கென்யா அசத்தும் தஞ்சாவூர் தமிழன் நிமல்ராகவன்
Top Banner

நீரின்றி இவ்வுலகில் எதுவுமில்லை. மனிதர்களுக்கு, விலங்குகளுக்கு, பறவைகளுக்கு, தாவரங்களுக்கு எனத் தண்ணீர் அனைவருக்கும் பொதுவானது. உயிர்களின் ஆதாரமாக விளங்கும் தண்ணீரைப் பாதுகாக்க வேண்டியது மிக அவசியம். இந்தச் சூழலில், தண்ணீரைப் பாதுகாக்கும் முயற்சியைத் தனது வாழ்வாகத் தேர்ந்தெடுத்து, தீவிரமாகக் களப்பணியாற்றி வரும் இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் நிமல் ராகவன்.

இந்தியாவில் மட்டுமின்றி ஆப்பிரிக்காவிலும் நீர் தேடி அலைந்து திரியும் மக்களின் கண்ணீரை அவர் துடைத்துக் கொண்டிருக்கிறார். வறட்சியான பகுதிகளில் நீராதாரத்தை மீளுருவாக்கம் செய்து இயற்கையைக் காத்துவரும் நிமல், இதுவரை 147 நீர் நிலைகளைப் பாதுகாத்து, மறுசீரமைத்து நிலத்தடி நீரையும், மக்களின் தண்ணீர்த் தேவையையும் மேம்படுத்தியிருக்கிறார். அந்தப் பணிக்காக மிலாப் தளத்துடன் இணைந்து நிதி திரட்டியும் வருகிறார். அவருடனான உரையாடலின் சுருக்கம்.

உங்கள் பயணம் எப்படித் துவங்கியது?

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவன் நான். பொறியியல் படித்துமுடித்து 2018 வரைக்கும் துபாயில் பணியாற்றிவந்தேன். விடுமுறைக்காக ஊருக்கு வந்த நேரத்தில் தான் கஜாபுயல் தமிழகத்தைத் தாக்கியது. நாம் எதிர்பார்த்ததை விட மிக மோசமான விளைவுகளை கஜா நமக்குத் தந்துவிட்டுப் போனது. எல்லோர் வீடுமே சாவு விழுந்த வீடாக மாறியது. ஊரில் எதுவுமில்லை. இனி, பிழைப்புக்கு என்ன செய்வதென மக்கள் பயந்துகொண்டிருந்தனர். நமது ஊர் இப்படி இருக்கும் போது, துபாய் போய் நான் எப்படிச் சந்தோஷமாக இருக்க முடியும். அதனால், துபாய் செல்லும் எண்ணத்தைத் தள்ளிப் போட்டேன். அதன்பிறகு, கஜா புயலால் பாதிக்கப்பட்ட 90 கிராமங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டேன். அதோடு, மரங்களைச் சீர் செய்வது, புதிய மரக்கன்றுகளை நடுவதென பொது வேலைகளையும் நண்பர்களுடன் இணைந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

எங்கள் ஊர் சுற்றி முழுக்க தென்னை விவசாயம் தான். கஜா புயலால் 60% மரங்கள் அழிந்துவிட்டன. மறுபடியும், தென்னை விவசாயத்தைத் தொடங்கினால் எப்படியும் 6 வருஷமாவது எடுத்துக் கொள்ளும். அதனால், குறுகிய காலத்தில் விவசாயத்தின் மூலமாக வருமானத்தை ஈட்டவேண்டுமென்றால், இங்குள்ள மக்களை நெல், கடலை, உளுந்து விவசாயத்துக்கு மாற்ற வேண்டும். அதற்கு, கண்முன் இருந்த ஒரே பிரச்சினை நீர்த் தேவை தான். எங்கள் பகுதியில் நீர் நிலைகளைப் பராமரிக்காததால் வறட்சி நிலவியது. குறிப்பாக, நீர் நிலை ஆக்கிரமிப்பு அல்லது வரப்பு ஆக்கிரமிப்பு அதிகம் நடந்திருந்தது. அதனால், நீர் நிலைகளைக் கவனிக்காமல் விட்டிருந்தார்கள். முதல்கட்டமாக, பேராவூரணி கிராமத்தை கையில் எடுத்தேன். மொத்தமாக 107 நாட்கள் 564 தன்னார்வலர்கள் இணைந்து குளத்தைச் சீர்செய்து நீரை நிரப்பினோம். நிலத்தடி நீர் மட்டம் 350 அடியிலிருந்து 50 அடியாக முன்னேறியது. இப்படி ஆரம்பித்ததே என்னுடைய பயணம்.

நீர் நிலை பராமரிப்பில் இருக்கும் சிக்கல் என்ன?

ஒரு பகுதியில் நீர் வறட்சியாக இருக்கிறதென்றால் அந்தப் பகுதியில் நிலத்தடி நீர் குறைவாகவோ, உப்பு நீராகவோ இருக்கும். இரண்டுக்குமான தீர்வு என்னவென்றால், காணாமல் போன ஏரி அல்லது ஆக்கிரமிக்கப்பட்ட ஏரியை மீட்டு அதைச் சீர் செய்து நீர் நிரப்பினால் போதும். ஆனால், ஆக்கிரமிப்பு செய்பவர்களிடமிருந்து ஏரி நிலத்தை மீட்பது பெரிய சவால். அதோடு, மணல் அள்ளுவது, ஏரியில் குப்பையைக் கொட்டுவது, மருத்துவக் கழிவுகள், மாமிசக் கழிவுகள், பில்டிங் மெட்டீரியல், கழிவுநீரைச் சேர்ப்பது என எக்கச்சக்கத் தடைகளையும் உடைத்தெறிய வேண்டும். அப்பா பிரைன் டியூமரில் அவதிப்பட்டுக் கொண்டிருந்தபோது மருத்துவச் செலவுக்கு, அக்காவின் திருமணச் செலவுக்கு, என்னுடைய படிப்புக்கென அனைத்தையும் தந்து எங்களைக் காப்பாற்றியது இந்த மண்தான். அப்படியே விட்டு விடமுடியுமா? பேராவூரணி கொடுத்த மகிழ்வையும், அனுபவத்தையும் ஒவ்வொரு ஊரிலும் செயல்படுத்தத் துவங்கினேன். அப்படித்தான், தற்பொழுது கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள சின்ன ஆவுடையார் கோவில் பகுதியில் இருக்கும் நீர் நிலைகளைச் சீரமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறேன்.

கென்யாவில் உங்கள் பணி எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது ?

ஆப்பிரிக்கா நாடுகளில் எதற்கெடுத்தாலும் ஆழ்துளை குழாய் போட்டுக் கொண்டே இருப்பார்கள். முடிந்த அளவுக்குத் தண்ணீரை எடுப்பார்களே தவிர, நீர்ச் சேகரிப்போ, மேம்படுத்துதலோ இருக்காது. அங்கு மழை பொழிகிறது. ஆனால், சேர்த்து வைக்க ஓர் இடம் கூடக் கிடையாது. அதனால், நிலம் வறண்டு தூர் வாராமல் கைவிடப்பட்டு இருக்கிறது. ஆக, நிலத்தில் தண்ணீர் மறுவூட்டம் என்பது மிக அவசியம். அதைத் தான் கென்யாவில் மேற்கொண்டு வருகிறேன். நீர் உறிஞ்சப் போடப்பட்டிருக்கும் போர் குழாய் வழியாக மழைநீரைச் சேகரிப்பது அல்லது நேரடியாக நீரைச் செலுத்துவதன் மூலம் நிலத்தடி நீரை அதிகரிக்க முடியும். ஒரு பகுதி நீர் வரத்தில் வலுப்பெற்றால் அங்கே, பல்லுயிர்ப் பெருக்கம் அதிகமாகும். பசுமையும், செழிப்பும் தானாக நடக்கும். ஆப்பிரிக்கப் பகுதிகளில் அடுத்தடுத்து ஆறு நாடுகளில் ‘வாட்டர் ஆப்ரிக்கா’ எனும் பெயரில் பணியாற்ற இருக்கிறோம்.

எதிர்கால இலட்சியம் என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்?

எதிர்காலம் அப்படியொன்று இல்லை. தண்ணீரை யாரும் காசு கொடுத்து வாங்கக் கூடாது. விவசாயத் தற்கொலை எனும் செய்தியை எந்த இதழிலும் பார்க்கக் கூடாது. முப்போகமும் நடக்கவேண்டும். இயற்கையும், அதை நம்பி வாழும் உயிர்களும் செழிக்க வேண்டும். தண்ணீரை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. உனக்கும் இல்லை. எனக்கும் இல்லை. எல்லோருக்குமானது. அதை அனைவரும் புரிந்துகொள்ளும் வரை என் பயணம் தொடரும்.

Top Banner

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *